பட்டாசு கூடாது.. பாடல்கள் கூடாது.. 500 பேர் தான்.! RSS பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகள்.!
இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பு தென் தமிழகத்தில் 20 இடங்களில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். தேவர் குருபூஜை , தூத்துக்குடி குலசை தசரா உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அனுமதி வழங்காமல் இருந்தனர்.
இதனை அடுத்து RSS அமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி இளங்கோவன், வழக்கை விசாரணை செய்து வந்தார். அப்போது தமிழக அரசு சார்பிலும், RSS தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
சுவையான மாங்காய் மீதுதான் கல்லடி படும் – அண்ணாமலை
RSS தரப்பில், தென் மாவட்டங்களில் 20 இடங்களில் எந்தெந்த இடங்களில் பேரணி நடைபெறும், எப்போது ஆரம்பித்து எப்போது முடியும், யாரெல்லாம் கலந்து கொள்ள உள்ளனர் உள்ளிட்ட முக்கிய விவரங்களை பிராமண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இறுதியில் , முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் தென் மாவட்டங்களில் நடைபெற உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்கமுடியாத சூழல் உள்ளது. அதனால், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மட்டும் RSS பேரணிக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என்றும் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.
RSS பேரணிக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்…
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பேரணி நடத்தப்பட வேண்டும்.
- 500 நபர்களுக்கு அதிகமானோர் பேரணியில் பங்கேற்க கூடாது.
- சாதி , மத அடையாளங்களை கொண்டிருக்கும் பாடல்களை பாட அனுமதியில்லை.
- பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
- பிற சமுக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது.
- கம்பு உள்ளிட்ட எந்த பொருட்களையும் பேரணியில் எடுத்து செல்ல கூடாது.
- நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது.