திமுக தலைவர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வீடுகளில் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு!
- தேசிய குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு மசோதாவிற்கு எதிராக நேற்று சென்னையில் பெசன்ட் நகரில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர்.
- தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள மு.கருணாநிதி ஆகியோர் இல்லத்தில் கோலம் போட்டு வேண்டாம் CAA., NRC என எழுதப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதா ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் வடமாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றது. தென் மாநிலங்களிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று பெசன்ட் நகர் சாலையில் தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதாவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் சாலையில் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். அதனால் கோலம் போட்ட பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்.பி கனிமொழி. தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்திற்க்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்தார். தற்போது, ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டு வாசல், மற்றும் கோபாலபுரத்தில் இருக்கும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் வீட்டில் குடிமக்கள் பதிவேடு எதிராகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும்கோலம் போடப்பட்டுள்ளது அந்த கோலத்தில் வேண்டாம் CAA, NRC என எழுதப்பட்டுள்ளது.