தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை – பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.பாஜக ,அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது.
இதனிடையே பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் .மேலும் இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம்.முதல்வர் வேட்பாளர் என்பது கூட்டணி உடன்பாட்டிற்கு பின் அறிவிக்க வேண்டிய விஷயம் என்று கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு அதிமுகவினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இதற்கு இடையில் தான் முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்தார்.சந்திப்பிற்கு பின்னர் முருகன் கூறுகையில், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்தற்கு நன்றியும் மற்றும் அதிமுக முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவித்ததாக கூறினார்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் எந்த குழப்பமும் இல்லை .வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது. 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.