தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு பதில் தெரிவித்தது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு கூறிருந்தது. பின்னர் மதுக்கடைகளில் மொத்த விற்பனை செய்யப்படாது என்றும் தனி நபர்களுக்கு தான் மதுபானம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தது. டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, தற்போது தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடை ஏதும் இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.