#BreakingNews : ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.பின்னர் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.அந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கினை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.