இந்த 28 நாட்கள் மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்..!
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்துக்கு புனேவில் இருந்து 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன.
சீரம் நிறுவனத்தின் 5.36 லட்சம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் தேதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொள்பவர் 2-வது டோஸ் போடும் வரை 28 நாள்களுக்கு மது அருந்தக்கூடாது என தெரிவித்தார்.