நம்பர் 1 அஞ்சல., நம்பர் 2 கல்வெட்டு ரவி., பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்.!
தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட பேசிய மு.க.ஸ்டாலின்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்டார். இதுகுறித்து பேசிய அவர், சமீப காலமாக தமிழகம், புதுவையில் பாஜகவில் இணைந்து கொண்டிருப்பவர்களின் பின்னணி என்ன? என்பதை மத்திய உளவுத்துறை மூலமாக விசாரித்து பாருங்கள், நான் ஆதாரத்துடன் சொல்கிறேன் என்று கூறி, புளியந்தோப்பு பெண் தாதா கஞ்சா வியாபாரி அஞ்சல, இவர் மீது கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள் உள்ளது.
கல்வெட்டு ரவி என்பவர் மீது 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 குற்ற வழக்குகள் இருக்கிறது. புதுவை எழிலரசி, இவர் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர். சீர்காழி சத்யா என்பவர் செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணல் கொள்ளையை தடுப்பவர்களின் தலையை வெட்டி கொலை செய்யும் கூலிப்படை தலைவர்கள் என கூறிய ஸ்டாலின், இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது, பிரதமர் மாதிரி எதை வேணாலும் பேசிவிட்டு போகமாட்டேன் நான் கலைஞரின் மகன் எதையும் ஆதாரத்துடன் தான் பேசுவேன் என கூறியுள்ளார்.
இன்னும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய பாட்டிலே என்னிடம் உள்ளது என கூறிய அவர், சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுவை சோழன், புதுவை விக்கி, பாம் வேலு, மயிலாப்பூர் டோக்கன் ராஜா என்று கூறிய ஸ்டாலின் பெயர்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது என விமர்சித்தார். மேலும், கொரங்கு ஆனந்த், குடவாசல் அருண், சீர்காழி ஆனந்த், சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, ஸ்பீடு பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர், தஞ்சை பாக்கெட் ராஜா, குடைவாசல் சீனு, பல்லு கார்த்திக், பூண்டு மதன் என வரிசையாக பெயர்களை பட்டியலிட்டார்.
இவர்கெல்லாம் யார் என்று தயவு செய்து பிரதமர் மோடியை விசாரியுங்கள், இல்லை உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை விசாரிக்க சொல்லுங்கள் என தெரிவித்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை திமுக மீது பேசுவதை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா தான் என்று மோடி பேசியிருந்தார். மாநிலங்களிலேயே சிறந்த ஆட்சியை கொடுத்தது, இந்த லேடியா, இல்ல குஜராத்தை சேர்ந்த மோடியா என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்டது இன்னமும் ஒலித்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.