நம்பர் 1 துறை.. என் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – பழனிவேல் தியாகராஜன் ட்வீட்!

P Thiaga Rajan (PTR)

நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையை வழங்கியதற்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நன்றி.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று புதிய அமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்பின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.

அதில், குறிப்பாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்து வந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பதவி, தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில் நுட்பத்துறை பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றி அமைப்பு.. யார் யாருக்கு எந்தெந்த துறைகள்? – முழு  விவரம் உள்ளே!

இந்த நிலையில், நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத்துறையை வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதல்வர் தலைமையின் கீழ் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும், பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் சமர்ப்பித்துள்ளேன்.

நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன் என்றுள்ளார். உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை முதலமைச்சர் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும், இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன். இன்று பொறுப்பேற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest