#NivarCyclone : செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை!
செம்பரப்பாக்கம் ஏரியில், உபரிநீர் திறப்பால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளதாகவும், நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உபரிநீர் திறப்பால், அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.