நிவார் புயல் எதிரொலி: இந்த மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
நிவார் புயல் தாக்கத்தை சந்திக்கக்கூடிய விழுப்புரம், நாகை, உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு நிவார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள அனைத்து துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் இந்த புயலின் எதிரொலியாக ரயில்கள், பேருந்து போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்ட நிலையில், புயல் தாக்கத்தை சந்திக்கக்கூடிய புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.