நிவர் புயல் சேதங்கள் – சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.3 பேர் காயமடைந்துள்ளனர்.26 ஆடு மற்றும் மாடுகள் உயிரிழந்துள்ளது. 14 ஏக்கரில் வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது . மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.
இந்நிலையில் நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், பாலங்கள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.