6 மணி நேரத்திற்கு நின்று தாக்கும் நிவர்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கரையை கடந்தபின் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த இவர் புயல் நிலை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுவை அருகே கரையைக் கடக்க கூடும். கரையை கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் கரையை கடந்த பின், கடலோர மாவட்டங்களில் 6 மணி நேரங்களில் புயலின் தாக்கம் இருக்கக்கூடும் என எச்சரித்த வானிலை ஆய்வு மையம், அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. புயலின் கண் பகுதி வரும்போது அதிகளவில் பாதிப்பு இருக்காது. ஆனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக குடிசை வீடுகள் விளம்பரப் பலகைகள், மின்சார கம்பங்கள், விளம்பரப் பதாகைகள் மற்றும் தொலைத் தொடர்புகள் பாதிக்கப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயல் கரையை கடந்த பின் ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சமயங்களில் 85 கிலோமீட்டர் வரையிலும் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.