அதிதீவிர புயலாக கரையை கடக்கும் நிவார்.. மணிக்கு 100-110 கீ.மி. வரை பலத்த காற்று வீசும்!
நிவார் புயல், அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனவும், மணிக்கு 100 முதல் 110 கீ.மி. வரை பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிவார் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும். இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 – 110 கீ.மி. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிவார் புயல், இன்று அதி தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மீட்டர் வரை உயரக்கூடும். அதுமட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.