தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும்- நிர்மலா சீதாராமன்
- சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.இந்த சட்டமும் ஜனவரி 10-ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் இந்த சட்டத்திற்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.இது தொடர்பாக பல இடங்களில் விளக்க கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது.அதன்படி கூட்டங்களும் நடத்தி வருகின்றது.
இதன் ஒருபகுதியாக சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,யாருடைய உரிமையையும் குடியுரிமை பறிப்பதல்ல. உரிமையை கொடுப்பதுதான். உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை கொந்தளிக்க செய்கின்றனர். யாருடைய குடியுரிமை பறிபோகும் என்று கூறி வருகிறார்களோ அவர்களிடம் உண்மையை விளக்க தயார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் கிடையாது.குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.