டிவிட்டரில் ட்ரெண்டாகும் நிர்மலா சீதாராமன்.! அன்னபூர்ணா முதல் மணிப்பூர் வரை.,
அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம் முதல் மணிப்பூர் பற்றி பதில் அளித்தது வரையில் டிவிட்டர் (எக்ஸ்) ட்ரெண்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்திருந்தார். அப்போது சிறுகுறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அன்னப்பூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தது முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரையில் சமூக வலைதளத்தில் டாப் ட்ரெண்டில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஸ்வீட் – காரம் :
கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற சிறுகுறு, நடுத்தர மற்றும் ஹோட்டல் தொழிலதிபர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா சீனிவாசன், உணவுப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறித்து “ஸ்வீட்டுக்கு 5%, காரத்திற்கு 12%, பிரெட், பன்-க்கு ஜிஎஸ்டி இல்லை. ஜாம் வைத்தால் 18 சதவீதம் வரையில் ஜி.எஸ்.டி. எங்க பில்லிங் கம்ப்யூட்டர் திணறுது.” என கலகலப்பாக கூறி இதனை முறைப்படுத்த கோரிக்கை வைத்தார்.
அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது . மேலும் , ஜி.எஸ்.டி பற்றிய விவாதத்தை எழுப்பியது. அப்போது கூட இது சாதரண கோரிக்கை என்று பலர் கடந்துவிட்டனர்.
மன்னிப்பு :
ஆனால், அதற்கு பிறகு தனியார் ஹோட்டலில் அன்னபூர்ணா சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து , “நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எங்கள் ஹோட்டல் தரப்பு கோரிக்கையை முன்வைத்தேன். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்” என கூறியிருந்தார்.
அவர் மன்னிப்பு கோரிய செய்தி, வீடியோவாக வெளியானது தான் ‘ஹைலைட்’. அதனை யாரோ (பாஜகவினர்) வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு விட்டனர். பின்னர் தான் நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னப்பூர்ணா ஹோட்டல் ஓனர் சீனிவாசன் ஆகியோர் டிவிட்டரில் (எக்ஸ்) டாப் ட்ரெண்டிங்கில் மாறினார்கள்.
ட்ரெண்டிங்கில் #Annapoorna :
தங்கள் தொழில் சார்ந்து சந்திக்கும் பிரச்னையை தீர்க்க நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்த அன்னபூர்ணா சீனிவாசனை பாஜகவினர் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டனர். அதனையும் வீடியோவாக வெளியிட்டு, தங்கள் ஆட்சி அதிகார போக்கை வெளிப்படுத்துகின்றனர் என எதிர்கட்சியினர் சரமாரியாக விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும் இணையவாசிகளும், அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்து விட்டனர். இதனால் தற்போது வரையில் அன்னபூர்ணா (#Annapoorna) டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
செய்தியாளர் சந்திப்பு :
அடுத்து பேசுபொருளாக மாறிய விவகாரம் நிர்மலா சீதாராமனின், செய்தியாளர்கள் சந்திப்பு. நேற்று கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது, இங்கு தெருவுக்கு தெரு கலவரம் நடக்கிறது என நிர்மலா சீதாராமன் (தமிழகத்தை மறைமுகமாக விமர்சித்து) கூறும்போது, ஒரு செய்தியாளர் “மணிப்பூரிலா.?” என கேட்டுவிட்டார்.
நிர்மலா சீதாராமன் டென்ஷன் :
அப்போது டென்ஷனான நிர்மலா சீதாராமன் , “நான் பதில் கொடுக்கிறேன் . எங்கும் ஓடமாட்டேன்” என ஆவேசமானார். பின்னர் நிதானித்து, “‘மிசோராமில் நம்ம மக்களை அடிக்க ராணுவத்தை அனுப்பியது காங்கிரஸ். மணிப்பூர் கலவரம் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. மணிப்பூர் பற்றி காங்கிரஸ் கட்சியினரிடம் கேளுங்கள். மணிப்பூர் கலவரம் சமயத்தில் மத்திய அமைச்சர் 3 நாள் அங்கிருந்தார். மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, உண்மை வெளிய வந்துவிடுமோ என அந்த கத்து, கத்துனாங்க… பஞ்சாப் கலவரத்தின் போது அதே சிங் சமூகத்தை சேர்ந்த மன்மோகன் சிங்கை வைத்து காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வைத்தனர்.” என ஆவேசமாக பதில் அளித்தார் நிர்மலா சீதாராமன்.
ட்ரெண்டிங்கில் நிர்மலா சீதாராமன் :
அன்னபூர்ணா சீனிவாசன் கோரிக்கை, அதன் பிறகான மன்னிப்பு வீடியோ என ட்ரெண்டிங்கில் இருந்த நிர்மலா சீதாராமனிடம், மணிப்பூர் பற்றி கேள்வி கேட்டதும், அதற்கு அவர் ஆவேசமாக பதிலளித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகிவிட்டது. இப்படியாக கடந்த சில நாட்களாகவே டிவிட்டர் (எக்ஸ்) ட்ரெண்டிங்கில் நிர்மலா சீதாராமன் இருக்கிறார்.