ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு 2034-ல் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்க்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மாநில சுய ஆட்சி பறிக்கப்படும் என்று குற்றம் சாட்டி வருகின்றன.
இன்று சென்னை காட்டாங்குளத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த தவறான புரிதல் இருக்கிறது என கூறினார்.
அவர் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது பல வருடமாக பல குழுக்கள் இதனை ஆய்வு செய்தார்கள். ஒரு உயர்மட்ட குழு தீவிரமாக ஆலோசனை செய்து இதற்கான வரையறையை உருவாக்கியுள்ளது. தற்போதே உடனடியாக இது அமலுக்கு வரப்போவது இல்லை. 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நாளையில் இருந்து தான் வரப்போகிறது. உடனடியாக மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய போகிறார்கள் என்றெல்லாம் இல்லை. இது பற்றி முழு விவரம் தெரியாமல் இருப்பவர்களுக்கு நாம் அதனை எடுத்து சொல்ல வேண்டும். பிரிவு 82ஏ பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.
அதன்படி, மாநில சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட முயற்சி மேற்கொள்ளப்படும். இது ஒரு பெரிய முயற்சி. ஒருத்தரோட கையெழுத்தால இது எல்லாம் மாறப்போறது இல்லை. அந்த அதிகாரம் யாருக்கும் இல்லை. இதன் மூலம் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும்.
2029க்கு பிறகு எல்லா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவரை ஒரே அளவில் கொண்டுவர ஆட்சி கால வரையறை செய்யப்படும், அதன் பிறகு 2034-ல் தான் அது முழுமை பெரும். அதன் பிறகு தான் ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். இதுபற்றி முழுதாக தெரியாமல் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான நடைமுறையை குடியரசுத் தலைவர் தொடங்குவார் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் , ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் குறிப்பிட்டார்.