வெள்ளத்தில் மிதக்கும் நீலகிரி! அதிக கன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!
நீலகிரி : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
அதைப்போல, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம், ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இன்னும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், இன்று அதிகனமழைக்கான (21 செ.மீ. க்கும் அதிகமான மழை) பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் கவனமாக இருக்கவும்
கோவையில் இன்று மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால்ஆரஞ்சு அலர்ட், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் பகுதிக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.