Nikarshaji: இஸ்ரோவில் தமிழர்கள்.! ‘ஆதித்யா எல்-1’ திட்ட இயக்குனராக தென்காசியை சேர்ந்த பெண்.!

Nikarshaji

ஆதித்யா எல்-1:

இஸ்ரோ விஞ்ஞானிகள் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை நாளை (செப்டம்பர் 2ஆம் தேதி) விண்ணில் செலுத்தவுள்ளனர். தற்போது, விண்கலத்தை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட் டவுன் நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக தமிழர்:

இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்துள்ளார். அதன்படி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த நிகர்ஷாஜி பணியாற்றி வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மீரான், சைட்டூன் பீவி தம்பதியின் 2வது மகள் ஆவார்.

படிப்பில் முதலிடம்:

செங்கோட்டை எஸ்ஆர்எம் நகரைச் சேர்ந்த இவர், 1978-79ம் கல்வியாண்டில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, 433 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக இடம் பிடித்தார். அதேபோல் 1980-81ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக இடம் பிடித்தார்.

பின்னர், நிகர்ஷாஜி தனது இளங்கலை பொறியியல் படிப்பை 1982 முதல் 1986 வரை நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முடித்தார். தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வரும் நிகர்ஷாஜி ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இஸ்ரோவில் தமிழர்கள்:

இதற்கு முன்னதாக, இஸ்ரோவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டங்களான சந்திரயான் 1 முதல் 3 வரையிலான திட்டங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர். அதன்படி, சந்திரயான் 1 திட்டத்திற்கு இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2 திட்டத்திற்கு இயக்குனராக முத்தையா வனிதாவும், சந்திரயான் 3 திட்டத்திற்கு வீரமுத்துவேலும் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

இதில் சந்திரயான்-2 திட்டமானது தோல்வியை சந்தித்தது. ஆனால், சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் திட்டத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நிகர்ஷாஜி திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்