பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
சென்னை உள்பட தமிழகம் மற்றும் கேரளாவில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தில் பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுபோன்று, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பிஎஃப்ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இதனை கண்டித்து பிஎஃப்ஐ கட்சி தொண்டர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 10 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையால் என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்களை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
என்ஐஏ சோதனை நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மண்டல தலைவர் பக்கீர் முகைதீன், மாட்டை வைத்தும், மதத்தை வைத்தும் தான் அரசியல் செய்து வருகிறார்கள். எங்கள் அமைப்பின் செயல்பாடு குறித்து மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏற்கனவே நடந்த சோதனையில் கூட ஒன்றும் கிடைக்கவில்லை, ஆர்.எஸ்.எஸ் – பாஜக தொடர்ந்து அரசியல் காழ்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. NIA போன்ற அதிகாரிகளை அவர்கள் தேவைக்கு பயன்படுத்தி கொள்கிறது என குற்றசாட்டினார்.