அடுத்து கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!

Default Image

சட்டமன்ற, உள்ளாட்சி, நகராட்சி தேர்தல் தோல்வியால் தற்போது அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என சிலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிராக உள்ளனர். சசிகலாவை கட்சி இணைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுபோன்று, ஒருபக்கம் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று தெரிவித்தாலும், மறுபக்கம் சசிகலா தலைமையின் கீழ் பயணம் செய்ய அதிமுக தலைமைக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருந்த சசிகலா, சமீப காலமாக தமிழகம் முழுவதும் ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் சசிகலா, அவ்வப்போது நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார்.

ஆனால், இது அரசியல் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பினார். சசிகலாவுக்கு தென் மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கிறது. அவரது சமூகத்தினரும் அங்கு கணிசமாக உள்ளனர். உண்மையில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ளதற்கு காரணம் தனக்கான செல்வாக்கை அறிவதற்காகத்தான் என தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நெல்லை,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஆன்மீக தரிசனம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பை முடித்துக் கொண்ட சசிகலா, அடுத்தகட்டமாக கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை சேலத்தில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆன்மிக பயணமாக இருந்தாலும், அரசியல் பயணமாக இருந்தாலும் இந்த பயணம் சசிகலாவுக்கு கை கொடுக்குமா? அதிமுகவில் சசிகலா மீண்டும் சேர்க்கப்படுவாரா? அதிமுகவின் தலைமை பொறுப்பு வந்து சேருமா என்கிற பல்வேறு எதிர்பார்ப்புகள் அரசியல் களத்தில் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்