அடுத்தடுத்த வெற்றி! இதற்காக மேலும் உழைப்பேன், ஓயாது உழைப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எனது பிறந்தநாளையொட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்.
தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட மேலும், மேலும் உழைப்பேன், ஓயாது உழைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், எனது பிறந்தநாளையொட்டி கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டி விடக்கூடாது என்றும் கூறினார்.
தற்போதைய சூழலில் திமுகவின் தேவை முன்பைவிடவும் அதிகமாகி இருக்கிறது. 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்த வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது திமுக. இது மக்கள் தந்த வெற்றி, இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும். தேர்தல் வெற்றிக்காக அல்லும், பகலும் உழைத்த உடன்பிறப்புகள், தோழமை கட்சியினர், ஆதரவு அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2019 நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், 2022 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி என அடுத்தடுத்த தேர்தல் களங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் இமாலய வெற்றியை வழங்கியுள்ளனர்.
மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். மார்ச் 4-ல் மேயர், துணைமேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளாட்சி அமைப்பு தலைவர், துணை தலைவர்க தேர்தெடுக்கப்படவுள்ளனர். சமூகநீதிப் பயணத்தில் தமிழ்நாட்டைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் திமுக பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.