அபராதம் விதிக்க புதிய நடைமுறை – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை வெளியாகியுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக, அபராதம் விதிக்கும் முறைகள் புதிய மாற்றத்தை சென்னை காவல் துறையினர் எடுத்து உள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது இதற்கு தீர்வாக அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அமல்படுத்தினார் .
இருந்தாலும் வாகன ஓட்டிகளுக்கான போக்குவரத்து போலீசாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. சிலர் சாலை விதிகளை மீறுவது மட்டுமல்லாமல் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரை மிரட்டியும் வருகின்றனர். இதற்கு தீர்வாக புதிய நடைமுறையை சென்னை போலீஸ் கமிஷனர் திரு மகேஷ்குமார் அகர்வால் IPS அமல்படுத்தி உள்ளார் .
இது குறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் புருஷோத்தமன் கூறுகையில், சென்னையில் தடை விதிக்கப்பட்ட இடங்களில் சிலர் அடாவடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அவ்வாறு விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் அபராதம் விதித்து அதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது ஒட்டிச் செல்வார்கள் இதனால் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவது தடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.