மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய்.. ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் எப்போது? வெளியானது புதிய அறிவிப்பு.!
தமிழ்ப்புதல்வன் : தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ”தமிழ் புதல்வன்” என்கிற திட்டம் கடந்த ஜூன் 14ம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டத்திற்கு நடப்பு கல்வியாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, ஆய்வு பணிகள் தொடங்கி முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கல்லூரியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றார். அப்போது, அங்கு அவர் பேசுகையில், “எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறையேனும் கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிடுவேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி கிடைத்துவிடும்.
கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதி தான். எந்த கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி, அவர்களது கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
1,400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம், அதில் கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். இறைப் பணியோடு சேர்த்து கல்விப் பணியும் செய்து வருகிறோம். கல்விக்கு சாதி தடையாக இருக்கக் கூடாது, கல்வியை உங்களிடம் இருந்து திருட முடியாது என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
இந்த ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள்.