மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அமல் – தமிழக அரசு
மின்வாரிய ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு.
மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கும் அறிவித்துள்ளனர்.
அதன்படி, ஜூன் 30, 2025ம் ஆண்டு வரை புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் இருக்கும் என்றும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக மின்வாரிய ஊழியர்களிடம் மாதம் ரூ.300 பிடித்தம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய காப்பீடு திட்டத்துக்காக தமிழக அரசு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் 1,169 மருத்துவமனைகளில், 203 வகையான சிகிச்சைகளை பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டு தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.