காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிகர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடியில் கட்டப்படும் என்று அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக அரசு சட்ட கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். ஐந்தாண்டு, மூன்றாண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-23ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்றும் திருவண்ணாமலை போளூரிலும், புதுக்கோட்டை திருமயத்திலும் தலா ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கள்ளக்குறிச்சி, தென்காசி, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூரில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும். உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிகர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம் ரூ.4.25 கோடி செலவில் கட்டப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
இதனிடையே மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் தமிழக அரசு திரும்ப திரும்ப வலியுறுத்தும் என்றும் காவல் நிலைய சிறை வைப்பு அறைகளில் மனித உரிமை மீறல் இல்லை என்பதை உறுதி செய்ய நன்னடத்தை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.