புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும் – ஆளுநர்
நாடு அனைத்துத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேச்சு.
நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 31 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெதிஷ் குமார், அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடக்கி வைத்த பின் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தளத்தில் பட்டபடிப்புகளை படிக்க பல்கலைக்கழகங்கள் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும். நாடு அனைத்துத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியா முன்னேற்றமடைய கல்வி முறையில் மாற்றம் தேவை. சமுதாய முன்னேற்றத்திற்காக பயன்பெறும் வகையில் கல்வி வளர்ச்சி அடைய வேண்டும். அதன் மூலம் இந்தியா பிற நாடுகளை வழிநடத்தும் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.