புதிய நிலக்கரி சுரங்கம் விவகாரம் – சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம்!
நிலக்கரி எடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்.
தமிழ்நாட்டில் வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான புதிய நிலக்கரி சுரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் உறுதி:
இதற்கு விவசாய சங்கங்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் பீதியடைய வேண்டாம் என்றும் புதிய நிலக்கரி சுரங்கங்களை அரசு அனுமதிக்காது எனவும் அமைச்சர்கள் உறுதியளித்திருந்த நிலையில், இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கடிதம்:
இதன்பின் தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று நோட்டீஸ் கொடுத்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளனர். திமுகவின் மன்னார்குடிஎம் எல்ஏ டிஆர்பி ராஜா மற்றும் அதிமுகவின் அருண்மொழி தேவன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.