தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!
தமிழகத்தில் வரும் டிசம்பர் 31, ஜனவரி 1, 2 ஆகிய மூன்று நாட்கள் மழை வாய்ப்பு என டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28,30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், டிசம்பர் 31-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது ” தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (26-12-2024) காலை 0530 மணி அளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, முழுமையாக வலுவிழந்து ஒரு ஈரப்பதமான காற்றாக தமிழகம் முழுவதும் பரவலாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ” தெற்கு வங்ககடலில் அடுத்த72 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாக கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. அதைப்போல, பருவமழை வரும் ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்.
இந்த 6-ஆம் சுற்று பருவமழையை பொறுத்தவரையில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் பரவலான கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அதே சமயம், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.