பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

பொங்கல் திருநாள் நாட்களில் நடத்தப்படவுள்ள UGC - NET தேர்வை மாற்றியமைத்திட வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கடிதம் எழுதியுள்ளார்.

ugc-net test

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அந்த நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதன் காரணமாக அந்த தேதியில் தேர்வு என அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து, பொங்கல் பண்டிகை நாட்களில் தேர்தல் நடத்துவது சரியானது அல்ல உடனடியாக தேதியை மாற்றவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிவுறுத்தலின் படி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பொங்கல் பண்டிகை அன்று நடைபெறவுள்ள தேர்வுகளின் தேதியை மாற்றியமைத்திட வேண்டும் என கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் கோவி. செழியன் கூறியதாவது ” மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (NTA) அதன் UGC NET தேர்வை 3 ஜனவரி 2025 முதல் 16 ஜனவரி 2025 வரை நடத்த அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்துத் தமிழ் சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் விழா பொங்கல் திருநாள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2025, 13 ஆம் தேதி போகி பண்டிகையும். 14 ஆம் தேதி பொங்கல் (தமிழ்ப் புத்தாண்டு) பண்டிகையும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகவும் (மாட்டுப் பொங்கல்) ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் / காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த நான்கு நாட்களும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே 2025 ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் உணர்வார்ந்த திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும்.

பொங்கல் திருநாளைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொங்கல் விடுமுறை நாட்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டால், மாணாக்கர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கும் எழுதுவதற்கும் தடை ஏற்படும்.

எனவே, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி – நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை வேறு தேதிகளில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்