அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும்! TET ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

tet teachers protest

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி என TET ஆசிரியர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. TET ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டி 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று மதியம் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

அமைச்சருடன் மேலும் 2 சங்கங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. முதலில் நடந்த அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் இதனால் போராட்டம் தொடரும் எனவும் TET ஆசிரியர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. 2013ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரியும், சம ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 2013, 2014, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென கடந்த 2018ல் அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு, டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளப்பியது.

இதையடுத்து, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மறு நியமன தேர்வு அரசாணை, சமூக நீதிக்கு எதிரானது. இதனால் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் பணிவாய்ப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஒன்றை வருடங்களில் மூன்று பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ளது. இருப்பினும், நியமன தேர்வு அரசாணையை ரத்து செய்யவில்லை. டெட் தெரிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பும் வழங்கவில்லை என்பதால் மீண்டும் எதிர்ப்பு வலுத்தது.

எனவே, ஆசிரியர் பணி வாய்ப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அதன்படி, சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக சம வேலை, சம ஊதியம் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வந்தனர். இந்த சூழலில் இன்று அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும் போராட்டம் தொடரும் எனவும் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்