நீட் தேர்வு குழு;பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – தி.க. தலைவர் மனுதாக்கல்..!
நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திராவிட கழக தலைவர் வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நீட் தேர்வு பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்துள்ள வழக்கில் இடைமனுதாரராக திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
“நீட் தேர்வானது மாணவர் சமுதாயத்தில் குறிப்பாக மாணவிகளின் உயிரை பறிக்கும் வகையில் உள்ளது.சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவும் ,
மேலும்,தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வசதி செய்வதற்கும்,அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி வாய்ப்பை பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைக்கவுமே குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே,குழு அறிக்கையை அரசு என்ன செய்ய போகிறது என்பதை அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.இதனால்,குழு அறிக்கையை சமர்பிக்கும் முன்பே வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை குழப்ப பார்க்கின்றனர். குறிப்பிட்ட பாடதிட்டத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றொரு தேர்வு என்பது நியாயமற்றது.
குழு அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.எனவே,பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜக மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று நேற்று ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரு மனுக்களும் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.