“நீட்” போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: தந்தை கைது.. மாணவி தலைமறைவு!
நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ்மோசடியில் பல் மருத்துவரும், மாணவியின் தந்தையான பாலச்சந்திரனை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த பல் டாக்டர் பாலச்சந்திரன் என்பவரின் மகள் தீக்ஷா, தனது தந்தையுடன் கடந்தாண்டு டிசம்பர் 7 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த மாணவி தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.
மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரின் உண்மையான மதிப்பெண் 27 என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை மீது சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பெரியமேடு போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவி மற்றும் அவரின் தந்தையை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் ஆஜராகாமல் பாலச்சந்திரன், தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவி தீக்ஷா மற்றும் அவரின் தந்தை பெங்களூரின் பதியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரை பதுங்கியிருந்த பாலச்சந்திரனை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.