நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை – ஆளுநருக்கு அறிக்கை விட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

Default Image

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட்டில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவிற்கு ஆளுநர் தனது இசைவினை விரைவில் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவுகளை நிறைவேற்ற துணை நிற்பார் என நம்புகிறேன்.

நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000 இடங்களில் சிபிஎஸ்சி மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் பயின்ற 394 பேர் மற்றும் ஐசிஎஸ்சி போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்தப் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும்.

அரசுப் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சிப் பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்திப் படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியின் அடிப்படிடையில் தங்களுக்கான இடங்களைப் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற வேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என்பதனையும் முதலமைச்சர் தொடந்து வலியுறுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில், தமிழ் நாடு சட்டமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது. ஆளுநர் அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து மத்திய  அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்றத் தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் துணை நிற்பார் எனவும் நான் நம்புகின்றேன் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து கூறியுள்ளார். அதாவது, 1967 முதல் இன்றுவரை இரு மொழி கொள்கையே தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக கடைபிடிக்கப்பட்டு வருவதை ஆளுநரின் கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன். இருமொழி கொள்கையால் தமிழ்நாடு மாணவர்களின் கல்வித்தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் இடம்பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ, குறைகளோ ஏதுமில்லை என்பதையும் ஆளுநர் நன்கறிவார் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் ஆளுநர் அவர்கள், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்