நீட் விலக்கு மசோதா:தமிழக ஆளுநர் இன்று டெல்லி பயணம்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
முதல்வர் விளக்கம்:
இதனையடுத்து,ஏழரை கோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா,கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி உள்ளது என்றும்,இந்த சூழலில் அதே மாளிகைக்கு சென்று ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும்.
இதனால்தான் தமிழக அரசு இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றும்,மற்றபடி ஆளுநர் மீது எப்போதும் மரியாதை உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆளுநரின் கார் மீது கல் வீசப்பட்டதா?:
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஆளுநரின் கார் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.
இதற்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ஆனால்,அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.
டெல்லி பயணம்:
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால் நாளுக்கு நாள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் டெல்லி பயணம்,மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.