“வெள்ளை அறிக்கை வேண்டும்”- முக்கிய கோரிக்கை வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு கடிதம்!

Published by
Edison
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தொகுத்து வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மேலும்,இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து ராமதாஸ் அவர்கள் எழுதிய கடிதத்தை அளித்தனர்.வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,ராமதாஸ் அவர்கள் கூறியிருப்பதாவது:
“சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக, இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட வன்னியர் மாணவர்களின் நலனைக் காப்பது குறித்து தாங்கள் ஆலோசனை நடத்தியிருப்பதும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில், வன்னியர்களுக்கான தனி இடஓதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டிருப்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக, கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பது தான்.
தமிழ்நாட்டில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமுதாயம் வன்னியர்கள் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ‘‘வன்னியர் சமுதாயத்தினருக்கும், பட்டியலினத்தவருக்கும் சமுதாயப் படிக்கட்டு நிலையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்ற வகையில் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்த வன்னியச் சமுதாயத்தினர் தெரிவித்தனர்.
நாங்கள் பார்வையிட்ட தென்னார்க்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஊர்களில் நெரிசலாக, அழுக்கடைந்த தோற்றத்துடன் வன்னியர்கள் வாழ்வதையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில இடங்களில் பெரும் நிலவுடைமையாளர்களைச் சார்ந்து இருப்பதையும் கண்டோம். முக்கியமான குடியிருப்புகளின் வீதிகளில் இவர்களுடைய மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் காண முடியும். இத்தகைய சூழல்களில் பிள்ளைகளின் கல்வி துன்பத்துடன் புறக்கணிக்கப்படுகிறது; பள்ளியிலிருந்து நின்று விடுவதும் மிகவும் சாதாரணமாகி விடுகிறது’’ என்று வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்து சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயத்திற்கு, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, சமூக நீதி மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல. அத்துடன் இட ஒதுக்கீட்டால் எந்தெந்த சமுதாயங்கள் பயனடைந்துள்ளன; எந்தெந்த சமுதாயங்கள் பயனடைய வில்லை என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதை ஒரு தொடர் நடவடிக்கையாக அரசு மேற்கொள்ள வேண்டும்.
1969&ஆம் ஆண்டு கலைஞர் அரசால் அமைக்கப் பட்ட சட்டநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான சமூகநீதி கிடைத்துள்ளதா? என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆராய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்,அந்த பரிந்துரை பின்பற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் ஒவ்வொரு சமூகத்திற்கும் எந்த அளவுக்கு பயன் கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பல முறை கோரியும் அதற்கு எந்தப் பயனும் இல்லை. தகவல் அறியும் உரிமைப்படி இந்த விவரங்கள் கோரப்பட்டும் அவை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு சமுதாயமும் இட ஒதுக்கீட்டால் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளன என்பதை அறிய இவ்விவரங்கள் மிகவும் அவசியம். ஆனாலும், அவற்றை தமிழ்நாடு அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மறைக்கின்றன. அவ்வாறு மூடி மறைக்க எந்த தேவையும் கிடையாது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் யார், யாருக்கு எவ்வளவு பலன் கிடைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்துள்ள பிரதிநிதித்துவத்தை கணக்கிடுவதும், கண்டறிவதும் கடினமான ஒன்றல்ல. மாணவர் சேர்க்கைகள், பணி நியமனம் உள்ளிட்ட அனைத்திற்கும் சாதி சான்றிதழ்கள் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. அவற்றை வைத்து இட ஒதுக்கீட்டுப் பிரதிநிதித்துவத்தை மிகவும் எளிதாக கணக்கிட்டு, வெளியிடுவது சாத்தியம் தான்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க செயலாகும்.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில், வன்னியர் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, அதில் சம்பந்தப்பட்ட சமுதாயங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்படும். எனவே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகள், இரண்டாம் தொகுதி பணிகள், நீதிபதி பணிகள் உள்ளிட்டவற்றிலும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக வெளியிட தாங்கள் ஆணையிட வேண்டும்.
அடுத்தக்கட்டமாக, 1989&ஆம் ஆண்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தொகுத்து வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அதன் மூலம் சமூகநீதி தழைப்பதை உறுதி செய்ய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

11 minutes ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

30 minutes ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

1 hour ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

2 hours ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

2 hours ago