“பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்” – கமல்ஹாசன்…!
தமிழக அரசின் பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சியில் தன்னாட்சி:
ஜனநாயகத்தின் உயிரோட்டம் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு, கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம். ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் பாதையை நோக்கி தமிழகத்தை நகர்த்துவதும் மக்கள் நீதி மய்யத்தின் முதன்மையான அரசியல் செயல்பாடுகளுள் ஒன்று. உள்ளாட்சி அமைப்புகள் முறையாகச் செயல்படுவதற்கு இருக்கும் பல தடைகளில் முக்கியமான ஒன்று நிதியாதாரம் இல்லாமையே. விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீட்டு முறை குறித்து சிந்திப்பது அவசியமாகிறது. .
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு:
பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பலநூறு கோடிகள் நிதி ஒதுக்கீடு என்பதுதான் பட்ஜெட்டின் வழக்கமான அறிவிப்பாக இருக்கும். ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை என்றைக்கு வரும், எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளாட்சித் தலைவர்கள் காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்வது கவனிக்கப்பட வேண்டியது. இன்னும் சொல்லப் போனால், பல கிராம ஊராட்சிகளில் நிதி இல்லாததால் பணிகள் பாதியில் நிற்பதைக் காணலாம். ‘நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’ என்பதுதான் ஊராட்சித் தலைவர்களிடமிருந்து கிடைக்கும் பதிலாக இருக்கும்.
உள்ளாட்சி அமைப்பானது, உள்ளூர்த் தேவைகளைத் திட்டமிடுவதிலும், கட்டமைப்புக்களை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு, சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம், உரிய நேரத்தில் நிதி ஆகியவை அவசியமாகின்றன.
மாநில சுயாட்சி – தி.மு.க:
மாநில சுயாட்சி என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் தி.மு.க. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்தே உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவான சிறப்புத் திட்டத்தை முன்னெடுப்பது சிறந்தது.
1992-ல் கொண்டுவரப்பட்ட 73, 74வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைத்தது. அது வெறும் காகிதங்களிலேயே தங்கிவிடாமல் இருப்பதற்கு அரசிடமிருந்து, அதிகாரப்பகிர்வு, நிதிப்பகிர்வு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
உள் சுயாட்சி அரசு:
நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘உள் சுயாட்சி அரசு’ என்ற உன்னத நிலையை உள்ளாட்சி அமைப்புகள் எய்தும்.தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பெறும் நிதி, மாநில திட்டக்குழு நிதி ஆகியவற்றை உள் சுயாட்சி அரசிற்குத் தாமதம் இல்லாமல் குறித்த காலத்தில் அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு முறையாக இல்லாததால், கிராம சபைக் கூட்டங்களும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் வருடத்திற்கு நான்கு முறை நடக்கும் சம்பிரதாயச் சடங்குகளாக முடிந்து போகின்றன. கிராம சபைகள் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன.
மாநில பட்ஜெட் அறிக்கை:
மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள் சுயாட்சி அரசுகளுக்கு எந்தெந்த காலகட்டத்தில், எவ்வளவு நிதி வழங்கப்படும் என்ற தெளிவான விவரம் அறிக்கையில் இடம் பெறவேண்டும். இதற்கு முன்னுதாரணமாக கேரளா, மேற்குவங்கம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வழக்கத்தை தமிழக அரசு பின்பற்றலாம்.
கேரள அரசின் பட்ஜெட்டில் இணைப்பு அறிக்கை 4 என்பது (Appendix IV Details of provisions earmarked to LSGD institutions In the budget ) உள் சுயாட்சி அரசுகளுக்கான நிதிப்பகிர்வைத் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்.
குடிநீர், சுகாதாரம் சார்ந்த பணிகள் முடங்கிவிடும்:
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியையே ஆதாரமாகக் கொண்டுள்ள கிராம ஊராட்சிகளுக்கு, தேவையான காலத்தில் நிதி கிடைக்காவிட்டால் மக்களின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் குடிநீர், சுகாதாரம் சார்ந்த பணிகள் முடங்கிவிடும். இந்த கொரானா காலத்தில் ஊரைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஊராட்சிகளுக்கு உத்தரவு வழங்கிய அரசு, அதற்கான நிதியை உரியகாலத்தில் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
கேரள முதலமைச்சரின் நிவாரண நிதி:
‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்பதைப் பிரகடனப்படுத்தும் தமிழ்நாடு அரசு ஊரக, உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். கேரள முதலமைச்சரின் நிவாரண நிதி இணையதளம் சிறப்பாக இருக்கிறது என்று அந்த நடைமுறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்தினார்,நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதுபோல, பட்ஜெட்டின்போது உள் சுயாட்சி அரசுகளுக்கான நிதிப்பகிர்வு குறித்த தெளிவான விவரங்களைத் தனியாக ஓர் இணைப்பு அறிக்கையாக வெளியிட வேண்டும்.
நெஞ்சு நிமிர்த்தி குரல்:
மாநில சுயாட்சிக்கு நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. மாபொ.சிவஞானம், கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்கள் மாநில சுயாட்சிக்கானப் பாதைகளை முன்னெடுத்தவர்கள். அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்புத் திட்டத்தை இந்த பட்ஜெட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.
பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் pic.twitter.com/3qYd4Wehi4
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2021