அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nayanar Nagendran

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம் தேதி இந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன்பின் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அவருக்கு சொந்தமான பணம் எனவும் அவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல்துறை சோதனை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் வெளியானது. அதில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்று கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை, இதனால் இரண்டாவது முறையாகவும் சம்மன் வழங்கப்பட்டது. அதன்படி ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

இதனை பலமுறை கூறிவிட்டேன். எங்கேயோ பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் என்னை தொடர்புபடுத்தி உள்ளனர். இது அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்துள்ளனர். இதனால் தான் சம்பந்தம் இல்லாமல் என்னுடைய பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் ரூ.4 கோடி பணம் பற்றி மட்டும் விசாரிக்கின்றனர். ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கில் கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான், காவல்துறை மிரட்டி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றிருக்கலாம். எனவே, எனக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே 2ம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளேன். காவல்துறைக்கு எனது முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்