டிஜிபி ஆஜராக தேசிய மனித உரிமை ஆணையம் சம்மன்..!
நெல்லை மாவட்ட முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் , அம்பை காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்ற சம்பவங்களில் சந்தேகத்திற்கு இடமாக கருதப்படும் நபர்களை விசாரணை என அழைத்து பல்பிடுங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பெயரில் பல்வீர் சிங் மட்டுமல்லாது அம்பை காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர்கள் என மொத்தம் 15 காவலர்கள் மீது முதலில் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கானது நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்து வழக்கு ஓன்று தொடரப்பட்டது. இந்நிலையில், மார்ச் 1-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் நேரில் ஆஜர் ஆகுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக 4 முறை நினைவூட்டல் வழங்கப்பட்டும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்காத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.