நமீதாவிடம் ‘இந்து’ மத சர்டிபிகேட் கேட்ட விவகாரம்., அமைச்சர் சேகர் பாபு விளக்கம்.!
சென்னை : நடிகை நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய நேற்று சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் நமீதா மற்றும் அவரது கணவரிடம், அவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தானா என்பதற்கான சான்றிதழை கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
பின்னர், நமீதா மற்றும் அவரது கணவர், தங்கள் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் எனவும், இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு தாங்கள் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். பின்னர் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்ட பின் கோயில் உள்ளே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை நமீதா மற்றும் அவரது கணவர் வீடியோ பதிவில், ” மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் என்னை இந்து என்பதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என கோயில் அதிகாரி ஒருவர் கேட்டார். அவர் அப்படி கேட்டது எனக்கு அதிருப்தியாக உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களில் நான் சாமி தரிசனம் செய்திருக்கிறேன். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொண்டார். பிறப்பிலிருந்தே நான் இந்து என தெரிந்தும் இது போன்று மத ரீதியான சான்றிதழ் கேட்பது என்ன மாதிரியான நடைமுறை என்று தெரியவில்லை” என பேசியிருந்தார்.
நமீதாவிடம் ‘இந்து’ மத சர்டிபிகேட் கேட்ட விவகாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி மேற்குறிப்பிட்டவாறு நடந்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் குறித்து இன்று சென்னையில் நடைபெற்ற ஓர் செய்தியாளர் சந்திப்பில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “நடிகை நமீதா கூறிய புகாரில் என்னையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்கள் மனம் புண்படியாகவோ, சட்ட விரோதமாகவோ ஏதேனும் நடந்து இருந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வருந்தி இருந்தால் எங்கள் வருத்தத்தை நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம். ” என நமீதாவிடம் ‘இந்து’ மத சர்டிபிகேட் கேட்ட விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.