பெரும் எதிர்பார்ப்பு!விடுதலை கோரிய நளினி,ரவிச்சந்திரன் வழக்கு – இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
விடுதலை கோரி நளினி,ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி,ரவிசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர்.அதன்படி, நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்றாலும், உயர் நீதிமன்றம் கூட பரிசீலிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும்,அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டு இருந்தாலும் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால்,மீண்டும் ஆளுநருக்கு அனுப்பக்கூடாது எனவும் நளினி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து,உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது.
இந்நிலையில்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை விடுதலை செய்யக் கோரி நளினி,ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. அதன்படி,தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி,நீதிபதி மாலா அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்க உள்ளது.இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் காட்டியதை சுட்டிக்காட்டி,விடுதலை கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
மேலும்,பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு,அரசு தலைமை வழக்கறிஞர்கள்,மூத்த வழக்கறிஞர்கள்,அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் காணொளி வாயிலாக சட்ட ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.