“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!
அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜக தொண்டர்கள் யாரும் பேச வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிகழ்வில் பேசியுள்ளார்.

சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார். அன்றிலிருந்து இப்போது வரை அதிமுக – பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் என பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
தேர்தல் கூட்டணி , கூட்டணி மட்டுமே, கூட்டணி அரசு இல்லை என பல கருத்துக்கள் உலா வந்ததை அடுத்து, அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். அதிமுக – பாஜக கூட்டணி பற்றி தொண்டர்கள் யாரும் சமூக வலைதளத்திலோ, தொலைக்காட்சியிலோ, பொதுவெளியிலோ பேச வேண்டாம் என கூறியிருந்தார் என தகவல் வெளியானது.
தற்போது அதே கருத்தை பாஜக தொண்டர்களிடத்தில் அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், ” பாஜகவுக்கு எத்தனை சீட் என நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நானும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு ஒரு தலைமை இருக்கிறது. அந்த தலைமைக்கு கட்டுப்பட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கேட்க வேண்டும். இன்று கூட பத்திரிக்கை பேட்டியில் ரங்கராஜ் பாண்டே என்னிடம் கேள்வி கேட்டார்கள். நீங்கள் தானே தலைவர் நீங்கள் தானே முடிவு எடுக்க வேண்டும் என சொன்னார்.
நான் அவரிடம், நான் மாநிலத் தலைவர். ஆனால், எங்களுக்கு மேலே ஒரு தலைமை இருக்கிறது. அவர்கள் முடிவுக்கும் நாம் கட்டுப்பாட்டாக வேண்டும். அவர்களின் முடிவு தான் எங்கள் இறுதி முடிவு. உறுதியான முடிவு எனக் கூறினேன். அதிமுக கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போது பாஜக எம்எல்ஏ 4 பேர் இருக்கிறோம்.
அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது. தயவு செய்து எந்த கருத்தும் சொல்லாதீங்க. கூட்டணி விவரங்களை அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பார்த்துக்கொள்வார்கள். ” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.