தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
நாகேந்திரன் விருப்பமனுவை தாக்கல் செய்தபோது எல். முருகன், அண்ணாமலை, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில் அவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு எதிர்ப்பு வேட்பாளர்கள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் ஏற்கனவே வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியானது.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பாஜக தலைமை நேற்று அறிவித்திருந்தது. அதற்கான விண்ணப்பம் இன்று அளிக்கவேண்டும் எனவும், ஏப்ரல் 14- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், நயினார் நாகேந்திரன் இன்று விருப்பமனு தாக்கல் செய்ய கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரைத் தவிர வேறு எவரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. அதற்கு காரணம், கட்சியின் மேலிட நிர்வாகம் நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அவர் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று முன்கூட்டியே தகவல்கள் பரவி வந்தன. இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் வகையில், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரனின் தேர்வை கட்சியின் மாநில தேர்தல் அதிகாரியான சக்ரவர்த்தி அறிவித்தார். நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்யும் நிகழ்வின்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உடனிருந்தனர்.