நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை என முதல்வர் பேரவையில் தெரிவித்தார்.
இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசும்போது, பிப்ரவரி 26 முதல் மே 6-ஆம் தேதி வரை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிமுக மறந்துவிட்டதா..? “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”என்ற திரைப்படத்தைப் போல இடைப்பட்ட காலத்தில் அதாவது மார்ச் தொடங்கி மே 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புக்கு அதிமுகவே காரணம்.
கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை, ஆட்சிக்கு வரப் போவதில்லை என தெரிந்து அதிமுக அலட்சியமாக இருந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொரோனாவுக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்கும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை, என்ற சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்தோம்.
தற்போது இல்லை இல்லை என்ற சூழல் இல்லாத நிலையை உருவாக்கி உள்ளோம். தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த நாள் முதல் படிப்படியாக நிறைவேற்றுகிறோம். திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 25 கோரிக்கைகளை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். முந்தைய அதிமுக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டது என்பது தவறானது.
கொரோனாவை பற்றி எதுவும் தெரியவில்லை, மருந்து இல்லை, மருத்துவர் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்தார். அதற்காக தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினோம். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினால் கலந்து ஆலோசிக்க முடியும் என்று வலியுறுத்தி இருந்தோம். இப்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூடிய போது அதிமுக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் என கூறினார்.