‘கட்சியை அழிவுக்கு கொண்டு செல்லும் சீமான்’ – நாதக கொ.ப.செ தமிழரசன் விலகல்.!

'சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது' என்று நாதகவில் இருந்து விலகிய மாநில நிர்வாகி தமிழரசன் கூறியிருக்கிறார்.

seeman - ntk

சென்னை : கடந்த சில நாட்களாக  நாம் தமிழர் கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அம்பத்தூர் கோ. தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் ஆரம்பம் முதல் நாம் தமிழர் கட்சியுடைய மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர்.

இது தொடர்பாக தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் தங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், “பிசுறு” என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மான் அவர்களை “மசுரு” என்று பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படி பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள், தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது.

எனது இத்தனை ஆண்டுகால தமிழ்த்தேசிய அனுபவமும், கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி, உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. மண்ணுக்கான மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி, எனது பயணம் தொடரும்

எனவே, தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுகிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்