நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திடீர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த நிலையில், வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார். இந்த சூழலில் நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் அடுத்தடுத்து சில ஷாக்கான விஷயங்கள் ஏற்பட்டு வருகிறது.
அதாவது, சமீபத்தில் சட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முக்கிய நிர்வாகிகள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எங்களை முடக்கவே இந்த சோதனை என்று சீமான் கூறியிருந்தார்.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சின்னத்தை வேறொரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், சீமான் அதிர்ச்சியில் இருக்கிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Read More – மக்களவைத் தேர்தல் : இறுதி கட்டத்தை எட்டியது அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இரண்டு தடவை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளராக என்னை நிறுத்தி, எனக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த என் தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்துடன் பிரிகிறேன்.
உங்களுடன் நான் பயணித்த காலங்கள் எனது வாழ்வின் முக்கியமான காலமாகவும், இனிமையான வசந்த காலமாகவும் என்னி மகிழ்ச்சி கொள்கிறேன். நான் உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம், வருத்தமடைய செய்யலாம். ஆனால் கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதிபிரிவினைகளும், சமூக படுகொலையையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விருப்பவில்லை.
பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒங்கிணைப்பாளர்கள் மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது என குற்றசாட்டியுள்ள அவர், நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விரும்பவில்லை என்றுள்ளார்.
மேலும், கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா ? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வருகிறேன். என்னதான் எனக்கு வருத்தம் இருந்தாலும் என்னை சீமான் அவர்கள் 8 ஆண்டுகளாக கண்ணியமாக நடத்தி எனக்குரிய மரியாதையை எனக்கு கொடுத்தமைக்கு என்றைக்கும் நன்றியுடன் இருப்பேன். தமிழ் தேசியம் ஒரு நாள் வெற்றி பெரும் போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் என்றுள்ளார்.