விடுதலைச் சிறுத்தைகளின் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் – சீமான் அறிவிப்பு
பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களை பார்த்து, நீங்கள் ஓசி-யில் தானே பேருந்தில் செல்கிறீர்கள்? வாய திறங்க… குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வாங்குனீங்களா? என கேட்டிருந்தார். இது பெண்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே செய்தவற்றை ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லி சொல்லி காட்டியே வாக்கு கேட்கும் கட்சிகள், இன்று ஆட்சியில் இருக்கும்போதே ஓசி பயணம் என்று பேசுவது அநாகரீகத்தின் உச்சம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலவசம், ஓசி, ஓசி என பரம்பரை சொத்தை விற்றுவிட்டு பேருந்துகளை வாங்கியிருக்க மாதிரி பேசுகிறார்கள். பேருந்தே எங்களின் வரி பணத்தில் தான் வாங்கி உள்ளீர்கள். ஓசியில் செல்பவர்கள் பணத்தில் தான் பேருந்து வாங்கி இருக்கீங்க, உங்கள் பணத்தில் வாங்கவில்லை, பேருந்தில் பெண்கள் ஓசி-யில் பயணம் செய்யவில்லை என ஆவேசமாக கூறினார்.
உங்களை எல்லாம் என்ன செய்வது என்று தெரியவில்லை என பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்துகிட்டு எப்படி கோபப்படாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். இதன்பின் பேசிய அவர், RSS பேரணிக்கு திமுக அரசு அனுமதி கொடுத்துவிட்டு கூட்டணி கட்சிகளை எதிர்த்து போராட சொல்வது வேடிக்கையானது. அரசியல் முரணை தாண்டி நோக்கத்தை கருத்தில் கொண்டு, அண்ணன் திருமாவளவனின் அழைப்பை ஏற்கிறோம். அக்.2 விடுதலைச் சிறுத்தைகளின் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் என்றும் அறிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அக்.2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளன. அக்.2 காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.