இன்று மீண்டும் தொடங்குகிறது அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை..!
2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலை அவர்கள், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் 2ம் கட்டத்தை கடந்த மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். அதன்படி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லுார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 28ம் தேதி வரை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக அறிவித்த நிலையில், இன்று மீண்டும் இந்த யாத்திரை தொடங்கவுள்ளது.