நெஞ்சே உறைந்து விட்டது, என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை – அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!
நெஞ்சே உறைந்து விட்டது, என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை என திமுக எம்.எல்.ஏ மகன் அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் என பலர் உயிரிழந்துள்ளனர். சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டையின் திமுக எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 28ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்நிலையில், அவரும் அவரது மனைவியும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகனுக்கு அண்மையில் தொற்று ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே அவர் மாற்று திறனாளியாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் அன்பழகனுக்கு தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சமீபத்தில் அவர் முற்றிலும் குணமானதை அடுத்து வீடு திரும்பியுள்ளன. இந்நிலையில் தொற்று பாதிப்பு உடல் நலத்தை மிகவும் குன்ற செய்ததால் அன்பழகன் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மா சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது என் நெஞ்சை உறைய வைத்து விட்டது எனவும், ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்த அன்பழகனை சுப்பிரமணியனும் அவரது துணைவியாரும் கண்ணின் மணிபோல காத்து வந்ததை கொரோனா பறித்து சென்றுவிட்டதாகவும், அவர்களுக்கு ஆறுதல் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ஊருக்கு ஒன்று என்றால் உடனே ஓடிப் போய் நிற்கக் கூடிய சுப்பிரமணியனுக்கு இப்படி ஒரு சோதனையா? தம்பி அன்பழகனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.