இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற்றம் – கோயில் நிர்வாகம் விளக்கம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன் என்பதற்கான விளக்கத்தை கோவில் நிர்வாகம் விளக்கியுள்ளது.
சென்னை : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, இதனைமுன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக இளையராஜா கோவிலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் அழைத்து சென்றார்கள்.அப்போது, அங்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சிலர் முகம் சுழித்து கொண்டு அவர் எப்படி உள்ளே செல்லலாம்? அவர் செல்ல கூடாது என கூறினார்கள். இதனால் இளையராஜாவை வெளியே செல்லும்படி ஜீயர்கள் கூறியுள்ளனர்.
கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில், அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு, இளையராஜா “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு களித்தார்.
நிர்வாகம் விளக்கம்
இளையராஜாவுக்கே இந்த நிலைமையா என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பிய நிலையில், இது ஒரு சர்ச்சையாகவே வெடித்துள்ளது. இதனால் உடனடியாக இதற்கு கோயில் நிர்வாகம் விளக்கமும் அளித்துள்ளது. அதன்படி, கோயில் கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.
இந்த தகவல் இளையராஜாவுக்கு தெரியவில்லை என்பதால் அவர் நேரடியாக அர்த்த மண்டபத்திற்குள் இறங்கினார். உடனடியாக இந்த மாதிரி ஒரு விதிமுறை இருக்கிறது. எனவே, யாருக்கும் அனுமதி கிடையாது என்பதை எடுத்துக்கூறினோம். மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது என உள்ளே இருந்த ஜீயர்கள் தெரிவித்த உடன் இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார் என நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.