பாஜக மாநில நிர்வாகி கொலை – சரணடைந்த 9 பேருக்கும் மே 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
பாஜக மாநில நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த 9 பேருக்கும், மே 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு.
சென்னை பூவிருந்தமல்லியில் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக எஸ்.சி. எஸ்டி, மாநில பொருளாளரான பி.பி.ஜி சங்கர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற சங்கரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
பாஜக மாநில நிர்வாகி சங்கரை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், பாஜக பட்டியல் அணியில் மாநில பொருளார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
அதன்படி, சரத், சங்கர் குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய 9 பேர் சரணடைந்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தொழில் போட்டியில் கொலை செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பாஜக மாநில நிர்வாகி சங்கர் கொலை வழக்கில் சரணடைந்த 9 பேருக்கும், மே 5ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.